காலிஸ்தான் விவகாரம்; இந்திய ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ!


காலிஸ்தான் விவகாரம்; இந்திய ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிப்பதை  தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ!
x
தினத்தந்தி 21 Sep 2023 10:44 AM GMT (Updated: 21 Sep 2023 11:14 AM GMT)

ஐக்கிய நாடுகள் அவை சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்திய ஊடகங்கள், ஹர்திப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அது குறித்து பதிலளிக்காமல் சென்று விட்டார்.

ஜெனிவா,

கனடாவில் காலீஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் இந்த விவகாரத்தில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் என்பவரை கனடா அரசு நாட்டைவிட்டு வெளியேற்றியது. கனடா அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டும் இன்றி பதிலடியாக கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக இந்தியா-கனடா உறவில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

கனடாவில் இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் இந்தியாவும் கனடா வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியது. கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா-இந்தியா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐநாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சென்றார். அப்போது இந்திய ஊடகங்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர். இதை கவனித்த ஜஸ்டின் ட்ரூடோ விலகி சென்றார். இந்திய ஊடகங்கள் காலிஸ்தான் விவகாரம் குறித்து ஏதேனும் கேள்வி கேட்கும்போது அவர் அளிக்கும் பதில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என நினைத்து ஜஸ்டின் ட்ரூடோ ஊடகங்களை தவிர்த்துவிட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது


Next Story