உக்ரைனில் வாழும் இந்திய குடிமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும் - இந்திய தூதரகம் அறிவுரை


உக்ரைனில் வாழும் இந்திய குடிமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும் - இந்திய தூதரகம் அறிவுரை
x

Image Credit:Reuters

போரின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு உள்ளே அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

கீவ்,

உக்ரைனிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும், ரஷியாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்தது. 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து ரஷியா இன்று உக்ரைன் தலைநகர் கீவ்வில் அடுத்தடுத்து 3 இடங்களில் ஏவுகணை மூலமாக குண்டுவெடிப்பை நடத்தியுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷியா இன்று 84 ஏவுகணைகளை ஏவியது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிவுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

உக்ரைனில் போரின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு உள்ளே அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.உக்ரேனிய அரசாங்கம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உக்ரைனில் வாழும் இந்திய குடிமக்கள் கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், உக்ரைனில் வாழும் இந்திய குடிமக்கள் தங்கள் நிலை குறித்து இந்திய தூதரகத்திற்கு உரிய தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன்மூலம், தேவைப்படும் இடங்களில் தூதரக அதிகாரிகள் அவர்களை அணுக இயலும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷிய தாக்குதல் தொடர்பாக விவாதிக்க, ஜி7 நாடுகள் அமைப்பு, நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை இந்தியா இதுவரை கண்டிக்கவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


Next Story