கிழக்கு உக்ரைனில் தீவிர போர்: கடும் சவாலான சூழலிலும் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவோம் - உக்ரைன் அதிபர் சபதம்!


கிழக்கு உக்ரைனில் தீவிர போர்: கடும் சவாலான சூழலிலும் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவோம் - உக்ரைன் அதிபர் சபதம்!
x

ரஷியப் படைகளுடன் தெருவுக்குத் தெரு சண்டையில் உக்ரேனியப் படைகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீவ்,

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தீவிர போர் மூண்டுள்ளது. உக்ரேனியப் படைகள் கிழக்கு நகரமான செவிரோடொனெட்ஸ்க்கில் ரஷியப் படைகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டதிலிருந்து, கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மாகாணங்களை உள்ளடக்கிய ரஷ்ய எல்லைக்கு மிக அருகில் உள்ள டான்பாஸ் பகுதியில் ரஷ்யா கவனம் செலுத்தி வருகிறது.

கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 97 சதவீதத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. மேலும், தங்களது படைகள் முன்னேறி வருவதாகவும் தென்கிழக்கு நகரமான ஜபோரிஜியா நகரையும் கைப்பற்ற ரஷிய படைகள் குறிவைத்துள்ளன எனவும் ரஷ்யா கூறியது.

இதுதான் தொழில்துறை பிராந்தியமான டான்பாஸ் பிராந்தியத்தினை பிடிப்பதற்கு திறவுகோல்போல அமையும். இந்த நகரில் 7 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.

இங்கு அச்சுறுத்தும் சூழல் நிலவுவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய மொழி பேசும் பிரிவினைவாதிகளின் சார்பாக, சுற்றியுள்ள லுஹான்ஸ்க் மாகாணத்தை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்துகிறது.

சீவிரோடோனெட்ஸ்கின் மையத்தில் ரஷ்ய தாக்குதல்களை தடுப்பது உக்ரேனியப் படைகளுக்கு கடினமாக உள்ளது என்று லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் செர்ஹி கெய்டாய் கூறினார். அங்கு ரஷியப் படைகளுடன் தெருவுக்குத் தெரு சண்டையில் உக்ரேனியப் படைகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் செவிரோடொனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்கள் ரஷிய படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ளன. அந்த நகரங்கள் செத்த நகரங்களாகி விட்டன என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதற்கு மத்தியில் பத்திரிகை ஒன்றின் இணையவழி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

"நம் ஒட்டுமொத்த தேசத்தின் மீதான ரஷியாவின் கட்டுப்பாட்டை முறியடித்து, மீண்டும் நாம் கட்டுப்பாட்டை பெற வேண்டும். நாங்கள் யாரையும் அவமானப்படுத்தப் போவதில்லை; நாங்கள் பதிலடி கொடுப்போம். சீவிரோடோனெட்ஸ்க், லைசிசான்ஸ்க், போபாஸ்னா, மிகவும் கடினமான இடங்களாக இருக்கின்றன" என்று ஜெலென்ஸ்கி கூறினார்.


Next Story