"கிரிப்டோ கரன்சியில் ஏன் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை " - பில் கேட்ஸ் பரபரப்பு பதில்..!!


கிரிப்டோ கரன்சியில் ஏன் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை   - பில் கேட்ஸ் பரபரப்பு பதில்..!!
x

Image Courtesy : AFP 

பில் கேட்ஸ் கிரிப்டோகரன்சி-யில் இதுவரை ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை.

வாஷிங்டன்,

உலகமெங்கும் கிரிப்டோகரன்சி என்று அழைக்கப்படுகிற மெய்நிகர் நாணயம் பிரபலமாகி வருகிறது. இந்த நாணயத்தை கண்களால் பார்க்கவோ, கைகளால் பரிமாற்றம் செய்யவோ முடியாது. இது டிஜிட்டல் வடிவத்தில் தான் இருக்கும். குறிப்பாக இணையவெளியில் கிடைக்கும்.

உலகளவில் இதற்கான சட்ட விதிகள் வகுக்கப்படாமல் வர்த்தகம் செய்யப்படுகிறது. உலகம் அறிந்த கிரிப்டோகரன்சியாக பிட்காயின் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எத்தேரியம், டெதர், கார்டனோ, இ.டி.எச்., மேட்டிக், எல்டிசி, டாட், சோல் என இந்த கிரிப்டோகரன்சியின் பட்டியல் நீளுகிறது. இவற்றின்மீது முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு பெருத்த லாபத்தை தருகிறது.

ஆனால் உலகின் முதல் 10 கோடீசுவரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களுள் ஒருவருமான பில் கேட்ஸ் கிரிப்டோகரன்சி-யில் இதுவரை ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை. இது தொடர்பாக சமீபத்தில் பேசிய பில் கேட்ஸ், " பொதுவாக நான் முதலீடு செய்யும் பணத்திற்கு நல்ல மதிப்பை கொடுக்கும் வகையில், சிறந்த பலன்களை கொடுக்கும் விஷயங்களில் முதலீடு செய்யவே விரும்புகிறேன்.

நிறுவனங்களின் மதிப்பு என்பது அவர்கள் எவ்வாறு சிறந்த தயாரிப்புகளை கொண்டு வருகிறார்கள் என்பதை அடிப்படையில், அதன் மதிப்பு உயருகிறது. ஆனால் கிரிப்டோவின் மதிப்பு, என்பது பிறர் எந்த அளவிற்கு அதனை வாங்குகின்றனர் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எனவே மற்ற முதலீடுகளைப் போல இதில் முதலீடு செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதனால், இதுவரை ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை" என தெரிவித்துள்ளார்.

"கிரிப்டோகரன்சி" உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள அதே நிலையில் இது தொடர்பாக பல மோசடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.


Next Story