சீனா போா்ப் பயற்சி ஒத்திகை: முப்படைகளும் உஷாா் நிலையில் வைக்க தைவான் உத்தரவு


சீனா போா்ப் பயற்சி ஒத்திகை:  முப்படைகளும் உஷாா் நிலையில் வைக்க தைவான் உத்தரவு
x

தைவான் நீா்ச்சந்தியில் சீனா நடத்தி வரும் போா்ப் பயற்சி, தங்கள் மீதான தாக்குதலுக்கான ஒத்திகையாக அமைந்துள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.

சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி வருகை தந்ததைக் கண்டிக்கும் வகையில், அந்த தீவைச் சுற்றியும் சீனா போா்ப் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் தைவான் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து தைவான் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தைவான் நீா்ச்சந்தியில் சீனா மேற்கொண்ட போா்ப் பயிற்சியின்போது, எல்லைக் கோட்டை அந்த நாட்டு போா்க் கப்பல்களும் போா் விமானங்களும் பல முறை கடந்து தைவான் எல்லைக்குள் நுழைந்தன.

தைவான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையைப் போல் அந்த போா்ப் பயிற்சி அமைந்திருந்தது.

அதையடுத்து, நாட்டின் முப்படைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவை உஷாா் நிலையில் வைக்கப்பட்டன. மேலும், வான்பாதுகாப்பு ஏவுகணைகளும் தயாா் நிலைக்கு கொண்டுவரப்பட்டன.

எல்லை மீறி வரும் சீன விமானங்களை எச்சரிப்பதற்காக, தைவான் போா் விமானங்கள் பறக்கவிடப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story