தென்சீனக்கடல் பகுதியில் அமெரிக்க விமானத்தை மோதுவதுபோல் பறந்த சீன போர் விமானம்; அமெரிக்க ராணுவம் குற்றச்சாட்டு


தென்சீனக்கடல் பகுதியில் அமெரிக்க விமானத்தை மோதுவதுபோல் பறந்த சீன போர் விமானம்; அமெரிக்க ராணுவம் குற்றச்சாட்டு
x

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் உளவு விமானத்தை மோதுவதுபோல் சீன போர் விமானம் பறந்து சென்றதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

தென்சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதே வேளையில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் அந்த தீவுகள் தங்களுக்குரியவை என கூறுகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது.

அதோடு சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதிக்கு அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பி ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறது. இதனை கடுமையாக எதிர்க்கும் சீனா சில வேளைகளில் தனது போர் விமானங்களை கொண்டு அமெரிக்காவின் விமானம் மற்றும் கப்பல்களை தென்சீன கடல் பகுதியில் இருந்து விரட்டியடிக்க முயல்வதும் உண்டு.

இந்த நிலையில் தென்சீன கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் உளவு விமானத்தை மோதுவதுபோல் சீன போர் விமானம் பறந்து சென்றதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 21- ந்தேதி இந்த சம்பவம் நடந்ததாகவும், அமெரிக்க விமானத்தின் முகப்பில் இருந்து 20 அடி தூரத்துக்கு முன்னால் சீன விமானம் பறந்ததாகவும், விமானங்கள் மோதுவதை தவிர்க்க அமெரிக்க விமானம் பின்வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் சீன ராணுவம் இதுகுறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


Next Story