ஒரு நாள் வாடகை ரூ.11 ஆயிரம்.. சொகுசு ஓட்டலில் வசிக்கும் சீன குடும்பம்


ஒரு நாள் வாடகை ரூ.11 ஆயிரம்.. சொகுசு ஓட்டலில் வசிக்கும் சீன குடும்பம்
x

வாழ்நாள் முழுவதும் ஓட்டலில் தங்கியிருக்க திட்டமிட்டிருப்பதாக அந்த குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

சொந்த வீடு கட்டி நிம்மதியாக வசிக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அந்த கனவு நிறைவேறுவதில்லை. காலம் முழுவதும் வாடகை வீட்டிலேயே வசிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், சீனாவை சேர்ந்த ஒரு குடும்பம், வீடுகட்டி வாழும் வசதி இருந்தும் தினசரி ரூ.11 ஆயிரம் வாடகை கொடுத்து ஓட்டலில் வசித்து வருகிறது.

அந்த குடும்பத்தில் 8 பேர் உள்ளனர். அவர்கள் நான்யாங் நகரில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் வாடகைக்கு அறைகள் (சூட் அறைகள்) எடுத்து தங்கி உள்ளனர். அங்கு ஒருநாள் வாடகை ஆயிரம் யுவானாகும். இது இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம் ரூபாயாகும். ஓட்டல் வாடகை அதிகம்தான் என்றாலும், அவர்களுக்கு அது பெரிதல்ல. மின்சாரம், தண்ணீர், பார்க்கிங்கிற்கு கூடுதல் கட்டணம் கிடையாதாம். இதுபற்றிய வீடியோக்களை அவர்களே வெளியிட்ட பிறகுதான் இது வெளி உலகிற்கு தெரியவந்தது.

"இன்று நாங்கள் ஓட்டலில் குடியேறி 229-வதுநாள். அறைக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் யுவான் செலவாகும். 8 பேர் கொண்ட எங்கள் குடும்பம் இங்கு வசதியாக வாழ்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறோம். எனவே எங்கள் வாழ்நாள் முழுவதும் இங்கேயே வாழ திட்டமிட்டு உள்ளோம்" என்று அந்த குடும்பத்தை சேர்ந்த மு யூ தெரிவித்து உள்ளார்.

தனது குடும்பத்திற்கு 6 சொத்துக்கள் இருப்பதாகவும், நிதி வசதி போதுமானதாக இருப்பதாகவும், இந்த வாழ்க்கை முறை பணத்தை சேமிக்க உதவுவதாகவும் கூறியிருக்கிறார் மு யூ.

நீண்டகாலம் தங்குவதற்கு ஓட்டல் நிர்வாகம் அவர்களுக்கு சில சிறப்பு சலுகைகளையும் வழங்கி உள்ளதாம்.

இந்த குடும்பத்தினரின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. வீடியோவைப் பார்த்தவர்களில் பலர், இந்த வாழ்க்கை முறைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாலும், சிலர் கேலி செய்துள்ளனர்.


Next Story