இலங்கை வந்தது சீன உளவு கப்பல்: தமிழக கடலோர பகுதியில் உஷார்நிலை


இலங்கை வந்தது சீன உளவு கப்பல்: தமிழக கடலோர பகுதியில் உஷார்நிலை
x

சீன உளவு கப்பல் நேற்று இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. ஒரு வாரம் அங்கு நிறுத்தப்படும் இந்த கப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானது.

கொழும்பு,

சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக 7 உளவு கப்பல்கள் உள்ளன.

அவற்றில், 'யுவான் வாங்-5' என்ற உளவு கப்பலும் அடங்கும். அது, 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது.

750 கி.மீ. வரை கண்காணிக்கும்

அதில், விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளன. விண்வெளியில் இயங்கும் செயற்கை கோள்களையும், வானில் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் இந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும். இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ள இடங்களை கண்காணிக்க முடியும்.

இத்தகைய கப்பல், கடந்த 11-ந் தேதி இலங்கைக்கு வருவதாக இருந்தது. இலங்கையின் தென்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களை கொண்டு, அந்த துறைமுகம் மேம்படுத்தப்பட்டது. கடனை திருப்பி செலுத்த முடியாததால், சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டது.

இந்தியா எதிர்ப்பு

எரிபொருள் நிரப்புவதற்காக ஆகஸ்டு 16-ந் தேதி வரை கப்பலை அங்கு நிறுத்திவைப்பதாக இருந்தது. ஆனால், அதன் வருகையால் தென் இந்தியாவில் உள்ள ராணுவ, கடற்படை நிலையங்களுக்கும், கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று இந்தியா கருதியது. கப்பலின் வருகைக்கு இலங்கையிடம் எதிர்ப்பு தெரிவித்தது.

எனவே, கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது. அம்பாந்தோட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில், அனுமதியை எதிர்பார்த்து கப்பல் காத்திருந்தது.

இலங்கை வந்தது

பின்னர், ராணுவ அதிகாரிகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆலோசனை நடத்தினார். இறுதியாக, கடந்த 13-ந் தேதி இலங்கை அரசு, பாதுகாப்பு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து சீன உளவு கப்பல் தனது பயணத்தை விரைவுபடுத்தியது.

இந்தநிலையில், சீன கப்பல் நேற்று இலங்கை வந்தது. உள்ளூர் நேரப்படி, காலை 8.20 மணிக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் வந்து நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.

இலங்கைக்கான சீன தூதர் ஜி ஜெங்காங் மற்றும் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனாவில் இருந்து பிரிந்து சென்ற எம்.பி.க்கள் பலர் கப்பலை வரவேற்றனர். 22-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு கப்பல் அங்கேயே நிறுத்தப்பட்டு இருக்கும்.

சீன தூதர் பேட்டி

இந்த காலகட்டத்தில், எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும். ஆனால், கப்பல் ஊழியர்களை மாற்ற அனுமதி அளிக்கப்படவில்லை. அதே சமயத்தில், நிபந்தனைக்குட்பட்டு, தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேவையான உதவிகளை அளிக்குமாறு இலங்கை அரசை சீன தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சீன தூதர் ஜி ஜெங்காங் நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுபோன்ற உளவு கப்பல்கள் வருவது இயல்புதான். கடந்த 2014-ம் ஆண்டு ஒரு உளவு கப்பல் வந்துள்ளது. இந்தியாவின் எதிர்ப்பு குறித்து இந்திய நண்பர்களிடம்தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா உஷார்

சீன உளவு கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரம் நிற்பதால், தென் இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களையும், அணுமின் நிலையங்களையும் கண்காணிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, இந்தியா உஷார் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக தமிழக கடலோர பகுதிகளில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு

இலங்கைக்கு சீன உளவு கப்பல் வந்ததன் எதிரொலியாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடிஉள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்ஜல சந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளன.

அதிநவீன ரேடார்

குறிப்பாக இலங்கை கடல் பகுதியில் இருந்து ஏதேனும் சந்தேகப்படும்படியான படகு கள் நடமாட்டம் உள்ளதா? அகதி என்ற போர்வையில் யாரும் ஊடுருவி விடக்கூடாது? என்பதற்காக, கீழக்கரை கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரேடார் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ரகசியங்களை சேகரிக்கும்

சீன உளவு கப்பலில், 'எலக்ட்ரானிக் வார்பேர்' எனப்படும் நவீன போர் தொழில்நுட்பங்கள் உள்ளன. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் முன்பு, அந்நாட்டின் இணையம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை முடக்குவது வழக்கம். அதற்கு தேவையான கருவிகள், கப்பலில் உள்ளன.

அம்பாந்தோட்டை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 படை தளங்கள் உள்ளன. அங்குள்ள தொழில்நுட்பங்கள், போர் விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட தகவல்களை சீன கப்பல் சேகரிப்பது மிகவும் எளிது.

இலங்கையில் நின்றபடி, இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை சேகரித்து செல்வது, நமது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

எந்த நாட்டுக்கும் பாதிப்பு வராது

அதே சமயத்தில், இந்த கப்பலால் எந்த நாட்டுக்கும் பாதிப்பு வராது என்று சீனா கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:-

இலங்கையின் தீவிர ஒத்துழைப்புடன் 'யுவான் வாங்-5' கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெற்றிகரமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபரின் பிரதிநிதி, 10-க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கப்பல் எரிபொருளை நிரப்பிச்செல்ல சிறிது காலம் ஆகும்.

யுவான் வாங்-5 கப்பலின் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப இருக்கும். அதன் செயல்பாடுகள், எந்த நாட்டின் பாதுகாப்புக்கும், பொருளாதார நலன்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது. எனவே, எந்த மூன்றாவது நாடும் அதை தடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story