ரஷிய விமானம் தடுத்து வைக்கப்பட்டது தனிப்பட்ட சட்ட விவகாரம் இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே விளக்கம்


ரஷிய விமானம் தடுத்து வைக்கப்பட்டது தனிப்பட்ட சட்ட விவகாரம் இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே விளக்கம்
x

இந்த விவகாரம், இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையாகவும் உருவெடுத்தது.

கொழும்பு,

ரஷிய விமான போக்குவரத்து நிறுவனமான 'ஏரோபிளாட்'டின் விமானம் ஒன்று, இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் கடந்த 2-ந் தேதி ரஷியாவுக்கு புறப்படுவதற்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்டது. கொழும்பு வணிகவியல் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த விமானம் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், இலங்கைக்கான தங்கள் விமான சேவையை ரத்து செய்வதாகவும், ஏற்கனவே தங்களிடம் 'ரிட்டர்ன் டிக்கெட்' பதிவு செய்து அங்கு சென்றுள்ளவர்களை அழைத்துவர மட்டும் விமானங்கள் இயக்கப்படும் என்றும் ஏரோபிளாட் அறிவித்தது.

இந்த விவகாரம், இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையாகவும் உருவெடுத்தது. இதுதொடர்பாக ரஷியாவுக்கான இலங்கை தூதரிடம் ரஷிய அரசு விளக்கம் கேட்டது.

இந்நிலையில், ஏரோபிளாட் விமானம் நிறுத்தப்பட்டது, இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல. மாறாக, குறிப்பிட்ட விமான நிறுவனத்துக்கும், அயர்லாந்து நிறுவனம் ஒன்றுக்கும் இடையிலான தனிப்பட்ட சட்ட விவகாரம் என்று ரஷிய அரசிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக அந்த விமானத்தின் ஊழியர்கள், பயணிகளுக்கு இலங்கை விமான போக்குவரத்து மந்திரி நிமல் சிறிபால டி சில்வா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை தீர்க்க ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.


Next Story