டிஸ்னி நிறுவனத்திலும் ஆள் குறைப்பு; 7 ஆயிரம் பணியாளர்கள் நீக்கம்


டிஸ்னி நிறுவனத்திலும் ஆள் குறைப்பு; 7 ஆயிரம் பணியாளர்கள் நீக்கம்
x

டிஸ்னி நிறுவனத்திலும் 7 ஆயிரம் பணியாளர்களை நீக்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் டுவிட்டர் தொடங்கி பேஸ்புக், அமேசான் வரை பல நிறுவனங்களும் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து ஆள்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அந்த நாட்டில் இந்த ஆண்டில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று கணித்து இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் அங்கு புகழ்பெற்ற பொழுதுபோக்கு மற்றும் ஊடக குழுமமான வால்ட் டிஸ்னி நிறுவனத்தாரும், உலகளவில் ஆள் குறைப்பு செய்துள்ளனர். அந்த வகையில் 7 ஆயிரம் பணியாளர்களை நீக்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஸ்னியில் 2 லட்சத்து 20 ஆயிரம் பணியாளர்கள் உலகமெங்கும் பணியாற்றி வந்தனர். இவர்களில் 3.2 சதவீத பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனம் 5½ பில்லியன் டாலர் (சுமார் ரூ.45 ஆயிரத்து 390 கோடி) செலவினை குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 23.51 பில்லியன் டாலர் ( சுமார் ரூ.1.94 லட்சம் கோடி) லாபம் ஈட்டி உள்ளதும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் கூடுதல் லாபம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story