என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்: இறுதியாக செய்தி அனுப்பிய நாசாவின் இன்சைட் விண்கலம்


என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்:  இறுதியாக செய்தி அனுப்பிய நாசாவின் இன்சைட் விண்கலம்
x
தினத்தந்தி 22 Dec 2022 7:45 AM GMT (Updated: 22 Dec 2022 7:46 AM GMT)

செவ்வாய் கோளில் முதன்முறையாக நிலநடுக்கம் பற்றிய ஆய்வு பணிக்காக சென்ற இன்சைட் விண்கலம், என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என இறுதியாக செய்தி அனுப்பியுள்ளது.



நியூயார்க்,


செவ்வாய் கோளில் நிலநடுக்கம் உள்ளிட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக விண்கலம் ஒன்றை முதன்முறையாக அனுப்ப அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு முடிவு செய்தது. இதன்படி, இன்சைட் என்ற விண்கலம் கடந்த 2018-ம் ஆண்டு மே 5-ந்தேதி செவ்வாய்க்கு அனுப்பப்பட்டது.

அந்த விண்கலம் 6 மாத பயணத்திற்கு பிறகு நவம்பர் 26-ந்தேதி செவ்வாய் கோளில் தரையிறங்கி ஆய்வு பணியை தொடங்கியது. 4 ஆண்டுகளாக பல்வேறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.

செவ்வாய் கோளின் நிலப்பரப்பை துளையிட்டும் ஆய்வு செய்தது. பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட சீஸ்மோமீட்டர் என்ற நிலநடுக்கம் பற்றி அறியும் உபகரணம் ஒன்றின் உதவியுடன் இன்சைட் விண்கலம், செவ்வாய் கோளில் ஏற்பட்ட அதிர்வுகளை கண்டறிந்துள்ளது.



இறுதியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் செவ்வாயில் ஏற்பட்ட அதிர்வுகளை பற்றி கண்டறிந்து அறிவித்தது. இந்த அதிர்வானது, 6 மணிநேரம் வரை நீடித்து உள்ளது. எரிகற்கள் மோதலால் ஏற்படும் இதுபோன்ற 1,300 அதிர்வுகளை கண்டறிந்து தெரிவித்து உள்ளது.

இந்த செயல்பாடுகள், செவ்வாயின் உட்புற பகுதியை பற்றி அறிவதற்கு உதவியது.

செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் மணல் புயலால், இன்சைட் விண்கலத்தின் சூரிய சக்தி தகடுகள் மூடப்பட்டு வந்தன. அதற்கு தேவையான மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பேட்டரிகள் விரைவில் செயலிழந்து விடும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், 2022 இறுதியில் இன்சைட் விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த முடிவு செய்து நாசா அதுபற்றிய அறிவிப்புகளை வெளியிட்டது.

இன்சைட் விண்கலம் ஆனது, செவ்வாயின் ஓராண்டு (2 பூமியாண்டுகள்) திட்ட நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது. எனினும், அது காலக்கெடுவை விட செவ்வாயில் இறங்கிய பின்பு, இரண்டு மடங்கு பணியாற்றியுள்ளது.




கடந்த சில மாதங்களாக அதன் ஆற்றல் குறைந்து கொண்டே வந்தது. அதன் இறுதி நாட்கள் வந்துள்ளன என கணிக்கப்பட்டது. எனினும், அதன் ஆற்றல் மாற்ற தூண்டலுக்கு, என்ன காரணம் என தெரியவரவில்லை. கடைசியாக கடந்த 15-ந்தேதி விண்கலத்துடன் தொடர்பு கொள்ளப்பட்டது.

அதன் பேட்டரியால், ரீசார்ஜ் செய்ய கூடிய திறனற்ற தன்மையால், ஆற்றல் மறைந்து சிக்னல் கிடைக்காத நிலை காணப்பட்டது. இதனால், பூமியில் இருந்து எந்தவித தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை.

இன்சைட் விண்கலம் கடைசியாக புகைப்படம் ஒன்றை பூமிக்கு அனுப்பி, அளித்த செய்தியில், என்னுடைய சக்தி மிக குறைவாக உள்ளது. அதனால், நான் அனுப்பும் கடைசி புகைப்படம் இதுவாக இருக்க கூடும்.




என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். செவ்வாயில் என்னுடைய காலம் பயன் அளிக்கும் வகையிலும், அமைதியான முறையிலும் இருந்தது.

எனது திட்ட குழுவினருடன் என்னால் தொடர்ந்து பேச முடியுமென்றால் நான் பேசுவேன். ஆனால், இத்துடன் விரைவில் நான் விடை பெற இருக்கிறேன். என்னுடன் இருந்ததற்காக நன்றி என தெரிவித்து உள்ளது என்று நாசா அமைப்பு தெரிவித்து உள்ளது.


Next Story