காலநிலை மாற்றம் காரணமாக அமேசான் காடுகளில் வறட்சி அபாயம்


காலநிலை மாற்றம் காரணமாக அமேசான் காடுகளில் வறட்சி அபாயம்
x
தினத்தந்தி 28 Sep 2023 1:21 AM GMT (Updated: 28 Sep 2023 6:05 AM GMT)

காலநிலை மாற்றம் காரணமாக அமேசான் காடுகளில் வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

ரியோ டி ஜெனிரோ,

உலகின் நுரையீரலாக அமேசான் காடுகள் செயல்படுகின்றன. ஜனத்தொகை வெளியிடும் கரியமில வாயுக்கள் உள்ளிட்ட நச்சுகளை சுத்திகரித்து ஆக்சிஜன் என்னும் உயிர்காற்றை உற்பத்தி செய்து வருகிறது. அமேசான் மலைக்காடுகளின் 60 சதவீதப்பகுதி தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ளது.

இந்தநிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அமேசானில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காட்டுத்தீ பரவியது. கட்டுங்கடங்காத காட்டுத்தீ காரணமாக காடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. மேலும் அவ்வப்போது பெய்யும் மழையும் பொய்த்துபோனது. அங்கு உள்ள அணைகள் உள்ளிட்ட நீர்தேக்க நிலையங்களின் கொள்ளளவு குறைந்து வருகிறது. எனவே வரும் காலங்களில் அங்கு வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

பூர்வ பழங்குடிகள் உள்பட 5 லட்சத்திற்கும் அதிகமான பிரேசில் மக்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவர் என பிரேசில் நாட்டின் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 166 கோடி ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டு நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story