நிர்வாணமாக வலம் வந்த போதை ஆசாமி.. புளோரிடா விமான நிலையத்தில் பரபரப்பு


நிர்வாணமாக வலம் வந்த போதை ஆசாமி.. புளோரிடா விமான நிலையத்தில் பரபரப்பு
x

குடிபோதையில் நிர்வாணமாக சென்ற நபர், விமான நிலையத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா:

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் வந்த ஒரு நபர், நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் நுழைந்தார். அந்த நபர் அங்குமிங்கும் செல்வதைப் பார்த்த சக பயணிகள் முகம் சுளித்ததுடன், அவரை விட்டு விலகிச் சென்றனர்.

விமான நிலைய முதலாவது முனையத்தின் செக்-இன் பாதை வழியாக சர்வ சாதாரணமாக நடந்து சென்ற அவர், பின்னர் விமான நிலைய டி.எஸ்.ஏ. பாதுகாப்பு பாதை நோக்கி நடந்து சென்றார். பாதுகாப்பு அதிகாரிகளை கடந்து சென்று, தடை செய்யப்பட்ட அறைக்குள் நுழைய முயன்றுள்ளார். பின்னர் போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்து, துணியால் போர்த்தி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில் அந்த நபர் மார்ட்டின் எவ்டிமோவ் (வயது 36) என்பதும், குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. ஆனால் எதற்காக இப்படி நடந்துகொண்டார் என்பது தெரியவில்லை. அந்த நபர் நிர்வாணமாக வலம் வரும் வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்ட மார்ட்டின் எவ்டிமோவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் தன்னை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், மது அல்லது பிற போதைப் பொருட்களை உட்கொள்ள கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அவ்வப்போது போதைமருந்து பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேசமயம் அவர் விமான நிலையத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடை அணிந்து சென்றாலும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று நீதிபதி தெரிவித்தார்.

1 More update

Next Story