இஸ்ரேலில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி


இஸ்ரேலில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி
x

இஸ்ரேல் நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஜெருசலேம்,

வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு பரவி வரும் சூழலில் இதுபற்றி உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு தெரிய வந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இவை தவிர்த்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இதன் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. கோடை காலத்தில் மக்கள் கூட்டம் கூடுவது, திருவிழாக்கள், விருந்துகள் என ஐரோப்பிய நாடுகளில் நோயின் பரவல் அதிகரிக்க கூடும் என ஐ.நா.வுக்கான ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் குளூஜ் கூறுகிறார்.

இந்த நோய் பாதிப்பு பெருமளவில் எலிகள் போன்ற வன விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றில் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடும் என கூறப்படுகிறது. இதன் பாதிப்புகள் பெரிய அம்மை நோயாளிகளுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட அறிகுறிகளை ஒத்திருக்கின்றன.

இதுவரை 11 நாடுகளில், 80 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 50 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. கண்காணிப்பு பணிகளை விரிவுபடுத்தும்போது, இந்த பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை காணப்படும். இதுதவிர மருத்துவ சிக்கலான நிலைக்கும் கொண்டு செல்ல கூடும். இதன் பாதிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேற்கு ஐரோப்பாவில் இருந்து இஸ்ரேல் வந்த 30 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிக்கான சந்தேகம் இருந்துள்ளது.

இதனால், டெல் அவிவ் நகரில் உள்ள இசிலோவ் மருத்துவமனைக்கு சென்று அவர் பரிசோதனை செய்துள்ளார். இதில், அவருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு முழு அளவில் மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ கண்காணிப்பில் வைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் நல்ல உடல்நிலையில் உள்ளார் என அமைச்சகம் தெரிவித்து உள்ளதுடன், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், தங்களுக்கு காய்ச்சல் மற்றும் தோலில் கடுமையான அரிப்பு போன்ற அறிகுறிகள் இருப்பது தென்பட்டால் உடனடியாக அவர்கள் மருத்துவரை பார்ப்பது நலம் என தெரிவித்து உள்ளது.


Next Story