2023-ல் ஐரோப்பாவில் வாகன உற்பத்தி 40 சதவீதம் குறையும் என கணிப்பு


2023-ல் ஐரோப்பாவில் வாகன உற்பத்தி 40 சதவீதம் குறையும் என கணிப்பு
x

ஐரோப்பாவில் எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக 2023-ம் ஆண்டு வாகன உற்பத்தி சுமார் 40% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ்,

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் வாகன தொழில்துறைக்கான மதிப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பாவில் எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக 2023-ம் ஆண்டு வாகன உற்பத்தி சுமார் 40% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல், ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் வாகன தொழில்துறையின் விநியோக சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன தொழில்துறை நிறுவனங்கள் எரிசக்தி தட்டுப்பாடு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி ஐரோப்பாவில் வாகன உற்பத்தி செலவு முன்பை விட பெருமளவு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பாவின் விநியோக நிறுவனங்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்வதால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story