கொழும்புவில் இலங்கை அதிபருடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு


கொழும்புவில் இலங்கை அதிபருடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
x

கொழும்புவில் இலங்கை அதிபருடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

கொழும்பு,

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலையில் இலங்கை சென்றடைந்தார். தலைநகர் கொழும்புவில் அவர் அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார்.

அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெய்சங்கருக்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரவு விருந்து அளித்தார்.

முன்னதாக இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரியையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பிராந்திய நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை சர்வதேச நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் கடன் பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்காக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் உத்தரவாதத்தை சர்வதேச நிதியம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுடன் இலங்கை பேசிவரும் நிலையில், ஜெய்சங்கரின் இந்த இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story