தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்... விசித்திர சம்பவம்


தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்... விசித்திர சம்பவம்
x

தாய்லாந்தில் தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்து மீன் சிக்கி கொண்ட விசித்திர சம்பவம் நடந்துள்ளது.


பாங்காக்,



தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்து உள்ளார்.

அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது. 5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது.

ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர முடியவில்லை. தொண்டைக்கும், சுவாச குழிக்கும் இடையில் அந்த மீன் சிக்கி கொண்டது. இதனால், பிராணவாயு செல்லும் வழி அடைப்பட்டது.

இதில் திணறி போன அந்த நபர் தொண்டையை இறுக பிடித்து கொண்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. மீன் சிக்கி இருந்த சரியான இடம் கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

இதுபற்றி மருத்துவமனையின் அதிகாரி செர்ம்ஸ்ரீ பாத்தோம்பனிகிராட் கூறும்போது, நீரில் இருந்து துள்ளி குதித்து ஒருவரின் தொண்டையில் மீன் சிக்கிய சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. இதற்கு முன் இதுபோன்ற விசயங்களை நான் கேள்விபட்டதே இல்லை.

எங்களது நோயாளியின் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் மருத்துவர்கள் செயல்பட்டனர். அவரை காப்பாற்றி விட்டனர் என கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், தாய்லாந்தின் ஆவோ டான் கூ பீச்சில், நீச்சலில் ஈடுபட்டிருந்த சுற்றுலாவாசியான நொப்படோல் ஸ்ரீங்கம் என்பவரின் தொண்டையில் ஊசி மீன் ஒன்று குத்தியது. இதில், அவரது நிலைமை மோசமடைந்தது.


Next Story