அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ்... குழி பறித்து பூனையை காப்பாற்றிய முயல்; வைரலான வீடியோ


அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ்... குழி பறித்து பூனையை காப்பாற்றிய முயல்; வைரலான வீடியோ
x

சக விலங்குக்கு சுயநலமின்றி உதவும் நோக்குடன் செயல்பட்டு பூனையை, முயல் ஒன்று காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

சமூக ஊடகங்களில் வெளிவரும் சில வீடியோக்கள் பார்ப்பவரின் நெஞ்சை வருடும் வகையில் சில சமயங்களில் அமைந்து விடுவதுண்டு. அதுபோன்ற வீடியோ ஒன்று சமீபத்தில் வெளிவந்து உள்ளது.

இதில், மனிதர்களை மிஞ்சும் வகையில், உதவி தேவைப்படும் தருணத்தில் சக பிராணிக்கு, கை கொடுத்து மற்றொரு பிராணி உதவிய காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

பூனை ஒன்று கார் நிறுத்தும் ஷெட்டுக்குள் சிக்கி கொண்டது. அதனால், வெளியே வர முடியவில்லை. தொடர்ந்து கத்தி கொண்டே இருந்தது. இதனை கவனித்த முயல் ஒன்று என்ன செய்வதென யோசித்தது. உடனடியாக, பூனையை வெளியே வர செய்யும் பணியில் இறங்கியது.

அந்த ஷெட்டின் சேறு நிறைந்த மணற்பாங்கான பகுதிக்கு சென்று, தனது இரு கால்களால், தோண்டியது. குழி சற்று பெரிய அளவில் ஆனதும், பூனை தனது முன்னங்காலை முயலை நோக்கி நீட்டுகிறது.

அதனை சற்று பொறுக்கும்படி, முயல் செய்கையால் தெரிவித்து விட்டு மீண்டும் குழி தோண்டியது. நம்மூரில் யானை பிடிப்பதற்கு, ஏன் மனிதர்களை வீழ்த்துவதற்கு குழி பறிப்பது சிலரது வழக்கம். ஆனால், சக விலங்கின் உதவி தேவைக்காக இந்த முயல், குழி பறிப்பில் தொடர்ந்து ஈடுபட்டது.

பூனை வெளியே வர கூடிய அளவுக்கு குழி தயாரானதும், இறுதியாக அந்த இடத்தில் இருந்து வெளி வருவதற்கான பாதையை முயல் வரைந்து காட்டி, வழி விட்டது. பூனை மெல்ல அதன் வழியே வெளியே வந்தது.

இந்த வீடியோவை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். பூனையின் இறுதி செயல் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்து உள்ளது. அதனை குறிப்பிட்டும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.


Next Story