துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினம்; ஆரஞ்ச் நிறத்தில் ஒளிர்ந்த வெள்ளை மாளிகை


துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினம்; ஆரஞ்ச் நிறத்தில் ஒளிர்ந்த வெள்ளை மாளிகை
x

தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினத்தையொட்டி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை ஆரஞ்ச் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அண்மையில் டெக்சாசில் உள்ள ஒரு பள்ளியில் 18 வயது நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். துப்பாக்கி வைத்திருப்பதற்கான வயது வரம்பை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை ஆரஞ்ச் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது. மேலும் அங்குள்ள பல்வேறு அரசு அலுவலக கட்டிடங்களும் ஆரஞ்ச் வண்ணத்தில் ஒளிரூட்டப்பட்டன.

அமெரிக்காவில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், கனடாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஹாடியா பெடில்டன் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை நிகழ்த்திய மைக்கேல் வார்ட் என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கோர்ட்டில் 84 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹாடியா பெடில்டனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இணைந்து 'ஆரஞ்ச் ட்ரீ' என்ற அமைப்பை தொடங்கி, துப்பாக்கி வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல், ஹாடியாவின் பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதியன்று அமெரிக்காவில் தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story