மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன் - துருக்கி அதிபர் எர்டோகன்


மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன் - துருக்கி அதிபர் எர்டோகன்
x

துருக்கியில் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து எர்டோகன் மீண்டும் அதிபர் ஆகிறார்.

அங்காரா,


துருக்கியில் அதிபர் எர்டோகன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து வருகிறார். அதாவது 2003 முதல் பிரதமராக இருந்த அவர் 2014-ல் அந்த பதவியை கலைத்து விட்டு உச்சபட்ச பதவியான அதிபராக மாறினார். அதிபராக மாறியபின்பு அவர் சர்வாதிகார ஆட்சி புரிவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி-சிரிய எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அப்போது மீட்பு பணிகளை சரிவர செய்யவில்லை என்றும் அவர் பொதுமக்கள் எர்டோகன் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். எனவே எர்டோகனுக்கு எதிராக அந்த நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்தன. பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக துருக்கிய காந்தி எனப்படும் கிளிக்டரோக்லுவை நிறுத்தினர்.

இந்த சூழ்நிலையில் துருக்கியில் கடந்த 15-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளையும், கிளிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். துருக்கியை பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். ஆனால் யாரும் பெரும்பான்மை பெறாததால் 2-வது சுற்று தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி 2-வது சுற்று அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கடும் போட்டி நிலவிய நிலையில் எர்டோகன் 52 சதவீதம் வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதாவது எதிர்க்கட்சிகளை விட சுமார் 20 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார் இதனால் எர்டோகனின் 21 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சி மாற்றம் நடைபெறுமா? என்று எதிர்பார்த்து இருந்த பலருக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.

இதற்கிடையே தன்னை நம்பி மேலும் 5 ஆண்டுகள் அளித்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக எர்டோகன் நிருபர்களிடம் கூறினார். மேலும் மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story