இலங்கை ராணுவ தளபதிகளுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு


இலங்கை ராணுவ தளபதிகளுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு
x
தினத்தந்தி 2 May 2023 11:15 PM GMT (Updated: 2 May 2023 11:15 PM GMT)

இலங்கை விமானப்படை, கடற்படை தளபதிகளை இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்தித்து பேசினார்.

கொழும்பு,

இலங்கை விமானப்படை, கடற்படை தளபதிகளை இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்தித்து பேசினார்.

இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, 4 நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இலங்கைக்கு சென்றார். இலங்கை விமானப்படை தளபதி சுதர்ஷனா பத்திரானா அழைப்பின்பேரில் அவர் சென்றுள்ளார்.

கொழும்பு நகரில் உள்ள இலங்கை விமானப்படை நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானப்படையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். கொழும்பு நகரில் புத்தர் கோவிலுக்கு சென்று அவர் வழிபட்டார்.

இந்நிலையில், 2-வது நாளான நேற்று கட்டுநாயகே விமான தளத்துக்கு வி.ஆர்.சவுத்ரி சென்றார்.

அங்கு இலங்கை கடற்படை தளபதி சுதர்ஷனா பத்திரானாவை வி.ஆர்.சவுத்ரி சந்தித்தார். இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

இலங்கை ஆயுதப்படைகளின் திறன்களை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டிருப்பதால், விமானத்தின் முன்பகுதியில் பொருத்தப்படும் ஏ.என்.-32 ரக 'புரபல்லர்' சாதனங்களை வி.ஆர்.சவுத்ரி இந்தியாவின் பரிசாக அளித்தார்.

கொழும்பு நகரில் உள்ள இலங்கை கடற்படை தலைமையகத்துக்கும் வி.ஆர்.சவுத்ரி சென்றார். கடற்படை சம்பிரதாயப்படி, வாசலிலேயே அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு இலங்கை கடற்படை தளபதி பிரியந்தா பெரேராவை அவர் சந்தித்தார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி தலைவர் மேஜர் ஜெனரல் சேனாரத் யாபாவையும் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்தித்தார். தேசிய பாதுகாப்பு கல்லூரியில், இந்திய விமானப்படையின் புரட்சிகர மாற்றம் குறித்து உரையாற்றினார்.

கல்லூரிக்கு ரூ.1 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

இந்த பயணம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story