'மெஸ்ஸி' பெயரை கூறி ஹாமாஸ் படையினரிடம் இருந்து சாதூர்யமாக தப்பிய மூதாட்டி


மெஸ்ஸி பெயரை கூறி ஹாமாஸ் படையினரிடம் இருந்து சாதூர்யமாக தப்பிய மூதாட்டி
x
தினத்தந்தி 10 March 2024 5:09 PM GMT (Updated: 11 March 2024 4:12 AM GMT)

மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் தன்னை கடத்த வந்த ஹமாஸ் படையினரிடம் இருந்து உயிர் தப்பியதாக மூதாட்டி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்,

இஸ்ரேல் மீது காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போரை தொடங்கி நடத்தி வருகிறது.

இந்நிலையில் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் தன்னை கடத்த வந்த ஹமாஸ் படையினரிடம் இருந்து உயிர் தப்பியதாக இஸ்ரேலில் வசிக்கும் 90 வயது மூதாட்டியான எஸ்டர் குனியோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அக்டோபர் மாதம் 2 பேர் என் வீட்டிற்குள் நுழைந்த போது நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் எனக்கூறினேன். அதற்கு அர்ஜென்டினா என்றால் என்ன..? ஒருவர் கேட்டார். நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா..? அதில் வரும் மெஸ்ஸியின் ஊர்தான் எனது ஊர் என தெரிவித்தேன். அதை கூறியதும் அவர்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு செல்பி எடுத்து சென்றனர்" என்று எஸ்டர் குனியோ தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது எட்டு குடும்ப உறுப்பினர்களுடன், எஸ்டரும் கடத்தப்பட்டு காசாவிற்கு அழைத்துச் செல்லப்படும் பயங்கரமான நிகழ்வை எதிர்கொண்டார். இருப்பினும் லியோனல் மெஸ்ஸி பற்றிய ஒரு விவாதம், ஹமாஸால் கடத்தப்பட இருந்த மூதாட்டியைக் காப்பாற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மெஸ்ஸி ஆடுகளத்திலும் அதற்கு வெளியேயும் ஒரு சிறப்பான கால்பந்து வீரர், அவர் உலகில் அளவிட முடியாத தாக்கத்தை அனைவரிடமும் ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story