இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: வீடு புகுந்து கைது...!


இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: வீடு புகுந்து கைது...!
x

 Twitter/@ImranKhanPTI

தினத்தந்தி 5 Aug 2023 9:39 AM GMT (Updated: 5 Aug 2023 10:10 AM GMT)

தோஷகானா வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இஸ்லாமாபாத்

தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

மேலும் இந்த வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் பணம் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இம்ரான் கான் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுமென்றே போலியான விவரங்களைச் சமர்ப்பித்துள்ளார், மேலும் அவர் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டு உள்ளது என நீதிமன்றம் கூறி உள்ளது.

ஆகஸ்டு 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் வெளிநாட்டு பயணங்களில் அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களில் பலவற்றை அரசின் தோஷகானா என்ற களஞ்சியத்தில் ஒப்படைக்காமல் தாமே வைத்துக்கொண்டதாகவும், சிலவற்றை விற்பனை செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் இம்ரான்கான் எம்.பி. பதவியை இழக்கிறார்.

இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்த சிறிது நேரத்திலேயே, லாகூரில் உள்ள அவரது ஜமான் பார்க் இல்லத்திற்குள் புகுந்து பஞ்சாப் காவல்துறையினரால் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

இதே போல் கடந்த மே 9 அன்று கைது செய்யப்பட்டார். அப்போது நாடு முழுவதும் வன்முறை ஏற்பட்டது. பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு இம்ரான் கான் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story