இலங்கைக்கு பொருளாதார உதவி: பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க,ஸ்டாலின், இந்திய மக்களுக்கு நன்றி - நமல் ராஜபக்சே


இலங்கைக்கு பொருளாதார உதவி: பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க,ஸ்டாலின், இந்திய மக்களுக்கு நன்றி - நமல் ராஜபக்சே
x

பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருவதாக இலங்கை முன்னாள் மந்திரி நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.


கொழும்பு,

கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு, பல தவணைகளில், 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு அரிசி, மருந்துகள் உள்ளிட்டவை மானியமாக வழங்கப்படுகின்றன. இந்தநிலையில் இலங்கையில், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அந்த மக்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு அரசு சார்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 25 டன் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த 18-ந் தேதி, சென்னை துறைமுகத்தில் அந்த கப்பலை மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அந்த கப்பல், நேற்று கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீசிடம் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அப்பொருட்களை ஒப்படைத்தார்.

இந்நிலையில் , இலங்கையின் முன்னாள் மந்திரிர் நமல் ராஜபக்சே டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்கள், நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருகிறது. இதை எங்களால் மறக்க முடியாது நன்றி...என பதிவிட்டுள்ளார்.


Next Story