அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஐதராபாத் பெண் என்ஜினியர் உள்பட 8 பேர் பலி


அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஐதராபாத் பெண் என்ஜினியர் உள்பட 8 பேர் பலி
x
தினத்தந்தி 8 May 2023 10:28 AM GMT (Updated: 8 May 2023 10:36 AM GMT)

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐதராபாத் பெண் என்ஜினியர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பள்ளிக்கூடங்கள், கேளிக்கை விடுதிகள் என பல இடங்களில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதனிடையே, அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 33 வயதான மவுரிஹொ ஹர்சியா (வயது 33) என்ற நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிகவளாகத்தில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய ஹர்சியாவை சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 8 பேரில் ஒருவர் இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சரோர்நகர் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தடிகொண்டா (வயது 27). இவர் டெக்சாசில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

ஐஸ்வர்யா தனது ஆண் நண்பருடன் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றபோது அங்கு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐஸ்வர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் ஐஸ்வர்யாவின் ஆண் நண்பரும் படுகாயமடைந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த பெண் என்ஜினியர் ஐஸ்வர்யா உயிரிழந்த நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என அவரது பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story