இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்தது - இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான்


இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்தது - இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான்
x

இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல்

2 நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இலங்கை திரும்பிய, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மந்திரியுமான ஜீவன் தொண்டமான், கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நாங்கள் இந்தியா சென்றிருந்தோம். மலையக மக்களின் பிரச்சினைகள், அரசமைப்பின் 13-வது திருத்தச்சட்டம், எரிசக்தி மற்றும் மின்சக்தி துறைக்கான முதலீடுகள் உள்ளிட்ட விஷயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன. இவை தொடர்பாக சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன. இதில், குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசும்போது, வீடுகளை நிர்மாணிப்பதால் மாத்திரம் பிரச்சினை தீராது. வீடுகள் அமைக்கப்பட்ட பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை, வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு கல்வியே சிறந்த தேர்வாக அமையும் என சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்திய பயணம் வெற்றி

மலையக பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடி வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ள இந்த நிதி, கல்வி, சுகாதார துறைக்கு பயன்படுத்தப்படும். இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ளது.

இந்தநிலையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான அரசு அங்கீகாரத்துடனான தேசிய விழா நவம்பரில் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வுக்கு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறப்பு தூதுவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கின்றேன். அதேவேளை, வருகிற 26-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை அதிபர் கூட்டியுள்ளார். அப்போது, அரசமைப்பின் 13-வது திருத்தச்சட்டம் தொடர்பான ஆவணம் முன்வைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். ஆக மொத்தத்தில் இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story