இலங்கையில் தீவிரமடைந்த போராட்டம் : நாடாளுமன்றத்தை கூட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை

Image Courtesy : AFP
இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு செய்துள்ளார்.
கொழும்பு,
அன்னிய செலவாணி நெருக்கடியால் இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர். இலங்கை அரசுக்கு எதிரான பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். போராட்டங்களில் வன்முறையும் வெடித்தது.
இந்த நிலையில் இன்று இலங்கை அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தனர்
அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர்.மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து, அதிபர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரும் விலகினர். அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஒடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இலங்கையில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது பற்றி ஆலோசிக்க அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே ஏற்பாடு செய்துள்ளார்.






