இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் பலி


இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் பலி
x

அப்துல்லா தலைமையிலான பயங்கரவாத அமைப்புக்கு ஈரானில் இருந்து நிதியுதவி மற்றும் உத்தரவுகள் வருகின்றன என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென புகுந்து அதிரடி தாக்குதல்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து, சிலரை பணய கைதிகளாகவும் பிடித்து சென்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களில் ஈடுபட்டது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என்று இஸ்ரேல் அரசு உறுதி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அப்துல்லா அபு ஷலால் கொல்லப்பட்டார். நபுலஸ் நகரில் பலாடா முகாம் பகுதியில் அப்துல்லா தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் வாகனம் ஒன்றில் சென்றபோது, படையினரின் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், அப்துல்லா மற்றும் அவருடன் இருந்த பயங்கரவாத உறுப்பினர்கள் சிலர் கொல்லப்பட்டனர். அவர், வருங்காலத்தில் மிக பெரிய பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

ஜூட் மற்றும் சமரியா ஆகிய பகுதிகளில் பல முக்கிய பயங்கரவாத உட்கட்டமைப்புகளில் ஒன்றை அமைத்தவர்களில் முக்கிய பொறுப்பு அப்துல்லாவுக்கு உள்ளது என்று இஸ்ரேல் படை தெரிவித்து இருக்கிறது.

கடந்த காலங்களில் பல தாக்குதல்களை அவர் நடத்தியிருக்கிறார். அவற்றில், கடந்த ஏப்ரலில் ஜெருசலேமில், ஷிமோன் ஹத்ஜடிக் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலும் ஒன்றாகும். இதில் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்தனர்.

இதுதவிர, கடந்த அக்டோபரில் இஸ்ரேல் படைக்கு எதிராக நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும் இவரே பொறுப்பாவார். இதில் வீரர் ஒருவருக்கு காயமேற்பட்டது.

அப்துல்லா தலைமையிலான பயங்கரவாத அமைப்புக்கு ஈரான் நாட்டில் உள்ள சிலரிடம் இருந்து நிதியுதவி மற்றும் உத்தரவுகள் வருகின்றன என்றும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.


Next Story