இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 36 பேர் பலி


இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 36 பேர் பலி
x
தினத்தந்தி 16 March 2024 11:04 AM GMT (Updated: 16 March 2024 11:25 AM GMT)

இஸ்ரேல் திட்டமிட்டு உள்ள தாக்குதலுக்கு, ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்க நாடுகள் மற்றும் ஐ.நா. அமைப்பு ஆகியவை எச்சரிக்கை விடுத்து உள்ளன.

காசா,

ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேலில், 1,139 பேர் பலியாகி உள்ளதுடன், பலர் பணய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் பலர் இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பாலஸ்தீனர்கள் 31,533 பேர் உயிரிழந்து உள்ளனர். 73,546 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த தாக்குதல் நீடித்து வருகிறது. காசாவின் மத்திய பகுதியில் நசீரத் நகரில், இஸ்ரேல் படையினர் இன்று வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பாலஸ்தீன மக்கள் பலரும் சிக்கி கொண்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில், 36 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்த தாக்குதலில், அகதிகள் முகாம் பகுதியில் இருந்த வீடு சேதமடைந்தது. காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை மருத்துவ அதிகாரிகள் மற்றும் தாக்குதல் சம்பவம் நடந்தபோது அதனை நேரில் பார்த்தவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த சூழலில், காசாவின் ரபா நகரில் சிக்கியுள்ள 15 லட்சம் பாலஸ்தீனர்களை வெளியேற்றி விட்டு, தரை வழி தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்து உள்ளார். எனினும் இந்த தாக்குதலுக்கு, ஐ.நா. அமைப்பு, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்து உள்ளன. அமெரிக்காவும் கூட எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளது.


Next Story