ரஷிய வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை


ரஷிய வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
x

மாஸ்கோவில், ரஷிய வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாஸ்கோ,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷிய தலைநகர் மாஸ்கோ போய் சேர்ந்தார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த பிறகு அவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். நேற்று அவர் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது:-

"இந்தியா-ரஷியா உறவு சீராகவும், காலத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. அந்த பின்னணியில் இப்பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இருதரப்பு ஒத்துழைப்பு, சர்வதேச நிலவரங்கள் குறித்த எங்கள் பார்வை, பரஸ்பர நலன்களில் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

பரஸ்பர பலன் அளிக்கக்கூடிய, நீண்டகால உறவை தொடர்வதே எங்கள் நோக்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக, பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், எங்கள் ஒருமித்த இலக்குகளை எப்படி சிறப்பாக நிறைவேற்றுவது என்று ஆலோசிப்போம்.

சர்வதேச நிலவரத்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக கொரோனா, நிதி அழுத்தம், வர்த்தக சிக்கல்கள் ஆகியவை உலக பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, உக்ரைன் போரின் விளைவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் ஆகியவை நிலையான பிரச்சினைகளாக உள்ளன. அவை முன்னேற்றத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எங்கள் பேச்சுவார்த்தை, ஒட்டுமொத்த உலக சூழ்நிலைக்கு தீர்வை ஏற்படுத்தும்."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story