நாஜி படை வீரருக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம்: மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்


நாஜி படை வீரருக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம்: மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்
x

கோப்புப்படம்

கனடா நாடாளுமன்றத்தில் நாஜி படை வீரர் கவுரவிக்கப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

ஒட்டாவா,

உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் கனடாவுக்கு பயணம் செய்தார்.

இந்த பயணத்தின்போது ஜெலன்ஸ்கியுடன் சென்றிருந்த யாரோஸ்லாவ் ஹுங்கா (வயது 98) என்கிற போர் வீரர் கனடா நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

ஹுங்கா நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தபோது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட எம்.பி.க்கள் அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று, கரவொலி எழுப்பி மரியாதை அளித்தனர்.

சபாநாயகர் ராஜினாமா

இந்த நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்ட ஹுங்கா 2-ம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப்படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதும், லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர்களில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.

இதனால் இந்த சம்பவம் உலக அளவில் கண்டனத்துக்கு உள்ளானது. இதையடுத்து கனடா நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்டனி ரோட்டா இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிரதமர் மன்னிப்பு கேட்டார்

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மவுனம் காத்து வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாடாளுமன்றத்தில் நாஜி படை வீரர் கவுரவிக்கப்பட்டதற்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில், "யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் நாஜி படையில் இருந்த நபருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது நாடாளுமன்றத்தையும், கனடாவையும் பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கிய ஒரு தவறு ஆகும். குறிப்பிட்ட நபர் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டதற்கு சபாநாயகர் அந்தோணி ரோட்டாதான் காரணம். எனினும் நடந்து விட்ட தவறுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன்" என்றார்.


Next Story