லிபியா: வெள்ள பாதிப்புக்கு 6 ஆயிரம் பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் மாயம்


லிபியா:  வெள்ள பாதிப்புக்கு 6 ஆயிரம் பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் மாயம்
x
தினத்தந்தி 13 Sept 2023 9:17 PM IST (Updated: 13 Sept 2023 10:06 PM IST)
t-max-icont-min-icon

லிபியாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி 6 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோரை காணவில்லை.

திரிபோலி,

தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லிபியாவை டேனியல் புயல் தாக்கியது. மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது.

இதனால், கனமழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல், கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

டேனியல் புயல் முதலில் கிரீஸ் நாட்டில் பெருவெள்ளம் ஏற்படுத்தி இருந்தது. இதன்பின்னர், லிபியா நாட்டில் கடந்த ஞாயிற்று கிழமை பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது.

லிபியாவில் உள்ள வாதி டெர்னா ஆறானது மலையில் இருந்து தொடங்கி, நகரம் முழுவதும் சென்று மத்திய தரைக்கடல் பகுதியில் கலக்கும். ஆண்டில் பல நாட்கள் வறண்டிருக்கும். ஆனால், கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், கனமழையில் மற்றும் நீர்தேங்கியதில், 2 அணைகள் திடீரென வெடித்தன. இதில் சிக்கி மக்களில் பலர் உயிரிழந்தனர். பல்வேறு பாலங்களும் சேதமடைந்து விட்டன. அணை உடைந்ததில் நீர் ஊருக்குள் புகுந்தன. இதில், பல கிராமங்களுக்குள் நீர் சூழ்ந்துள்ளது.

டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது. இதுவரை 6 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் ஆயிரக்கணக்கில் மக்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

1 More update

Next Story