மாடுகளை வைத்து புதிய திட்டம்: மார்க் சூகர்பெர்க் இன்ஸ்டா பதிவால் கொந்தளித்த பீட்டா


மாடுகளை வைத்து புதிய திட்டம்: மார்க் சூகர்பெர்க் இன்ஸ்டா பதிவால் கொந்தளித்த பீட்டா
x
தினத்தந்தி 12 Jan 2024 10:37 AM IST (Updated: 12 Jan 2024 11:42 AM IST)
t-max-icont-min-icon

உலகிலேயே மிகவும் உயர்தர மாட்டிறைச்சியை உருவாக்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதாக மார்க் சூகர்பெர்க் கூறிய நிலையில் இதற்கு பீட்டா கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

வாஷிங்டன்,

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனம் மெட்டா. இதன் நிறுவனரும் சி.இ.ஓவுமான மார்க் சூகர்பெர்க் அமெரிக்காவை சேர்ந்தவர். உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள மார்க் சூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு மட்டும் பல லட்சம் கோடிகளை தாண்டும். என்னதான் பெரும் கோடீஸ்வரராக இருந்தாலும் ஓய்வு நேரத்தில் மிகவும் எளிமையாக தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவார். அப்போது எடுக்கப்படும் படங்களை தனது சமூக வலைதள கணக்கிலும் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், அண்மையில் மார்க் சூகர்பெர்க் தனது இன்ஸ்டா பதிவில் , தான் மாடுகளை வளர்த்து வருவதாகவும் உலகிலேயே உயர் தரமான மாட்டிறைச்சியை தயாரிப்பதை இலக்காக கொண்டு இருப்பதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக மார்க் சூகர்பெர்க் கூறுகையில், "

"உயர்தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது இலக்கு. அதற்காக எனது பண்ணையில் வளர்க்கும் மாடுகளுக்கு மக்காடமியா கொட்டைகள் மற்றும் பீர் போன்றவை உணவாக கொடுக்கிறோம். இதன்மூலம், தரமான இறைச்சியை தயாரிக்கலாம். இந்த பீர் மற்றும் மக்காடமியா கொட்டைகளும் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக பல ஏக்கர் பரப்பளவில் மக்காடமியா மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளின் இறைச்சி மிகவும் சுவையாக உள்ளது" என்றார்.

அதோடு நின்றுவிடாமல், வறுத்த மாட்டிறைச்சி புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் ஒவ்வொரு மாடும் ஆண்டுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பவுண்ட் மதிப்புள்ள உணவை உண்ணும் என்றும், இதற்காக பல ஏக்கர் பரப்பளவில் மக்காடமியா விதைகளை பயிரிட்டுள்ளதாகவும் மார்க் சூகர்பெர்க் பதிவிட்டு இருந்தார்.

மார்க் சூகர்பெர்க்கின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும், சில எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன. விலங்கு நல அமைப்பான பீட்டாவும் இதை விமர்சித்துள்ளது. இதுபற்றி பீட்டா கூறுகையில், " டெக்னாலஜியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு விலங்கும் முக்கியமானது. நீங்கள் சொல்லும் இந்த திட்டம் விலங்குகளையும் இந்த கிரகத்தையும் அழிக்கிறது. உங்கள் குழந்தைகளையும் அதிர்ச்சி அடையவைக்கும். ஆக்கப்பூர்வமான விஷயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. விலங்குகளை காப்பாற்றும் வீகன் உணவுகளை ஊக்கப்படுத்தலாம்" என்று கூறியுள்ளது.

1 More update

Next Story