"எனது செயல் ஏற்கத்தக்கது அல்ல..." - ஆஸ்கார் சர்ச்சை குறித்து மனம் திறந்த வில் ஸ்மித்


எனது செயல் ஏற்கத்தக்கது அல்ல... - ஆஸ்கார் சர்ச்சை குறித்து மனம் திறந்த வில் ஸ்மித்
x

ஆஸ்கார் நிகழ்ச்சியில் கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரம் குறித்து நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம், நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார்.

விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.

சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் உலக அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட், 'அலோபீசியா' எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கிறிஸ் ராக் கிண்டல் செய்தது தவறு என்றும் வில் ஸ்மித் செய்தது சரியென்றும் சிலர் வாதிட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டது.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித், எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். அவர் தனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடம் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என ரசிகர்கள் வில் ஸ்மித்திடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக வில் ஸ்மித், தனது யூ-டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தான் கிறிஸ் ராக்கை தொடர்பு கொண்டு பேச முயன்றதாகவும், ஆனால் இது குறித்து தற்போது பேச தயாராக இல்லை என்று கிறிஸ் ராக் தரப்பில் பதிலளித்ததாகவும் வில் ஸ்மித் கூறியுள்ளார். மேலும் தனது செயல் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல என்றும் கூறியுள்ள வில் ஸ்மித், இதற்காக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், அவருடன் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story