உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.. நேட்டோ பொதுச்செயலாளர் தகவல்


உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.. நேட்டோ பொதுச்செயலாளர் தகவல்
x

மரணம் விளைவிக்காத ஆயுதங்கள், மருத்துவ பொருட்கள், சீருடைகள் மற்றும் குளிர்கால உபகரணங்கள் போன்ற ஆதரவை மட்டுமே உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் வழங்குகின்றன.

பிரஸ்ஸல்ஸ்:

ரஷியா-உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் தொடர்ந்து உதவி செய்கின்றன. நேட்டோவின் சில உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் படைகளை வழங்கலாம் என தகவல் பரவியது.

ரஷியாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள போராடும் உக்ரைனுக்கு உதவ, ராணுவ வீரர்களை அனுப்புவதற்கு சில நாடுகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாமா? என்று பரிசீலனை செய்வதாக ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று கூறியிருந்தார். ஸ்லோவாக்கியா ராணுவ வீரர்களை அனுப்புவது தொடர்பாக தனது அரசு முன்மொழியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பரிசீலனை செய்வதாக கூறப்படும் நாடுகளின் பெயர்களையும் அவர் குறிப்பிடவில்லை.

ஆனால் அப்படி எந்த திட்டமும் இல்லை என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார்.

"நேட்டோ நட்பு நாடுகள், உக்ரைனுக்கு இதுவரையில்லாத அளவில் அதிக ஆதரவை வழங்குகின்றன. 2014 முதல் ஆதரவு கொடுக்கிறோம். முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு ஆதரவை அதிகப்படுத்தினோம். ஆனால் உக்ரைன் மண்ணில் நேட்டோ துருப்புக்களை களமிறக்கும் எந்த திட்டமும் இல்லை" என்று ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார்.

மரணம் விளைவிக்காத ஆயுதங்கள், மருத்துவ பொருட்கள், சீருடைகள் மற்றும் குளிர்கால உபகரணங்கள் போன்ற ஆதரவை மட்டுமே உக்ரைனுக்கு, நேட்டோ கூட்டணி வழங்குகிறது. ஆனால் நேட்டோவின் சில உறுப்பு நாடுகள் கனரக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை தனியாக அனுப்புகிறார்கள். படைகளை உக்ரைனுக்கு அனுப்பும் எந்தவொரு முடிவாக இருந்தாலும் அனைத்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story