நேபாள ஜனாதிபதி நெஞ்சு வலியால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி


நேபாள ஜனாதிபதி நெஞ்சு வலியால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
x

நேபாள ஜனாதிபதி நெஞ்சு வலியால் ஒரு வாரத்தில் 2-வது முறையாக மீண்டும் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

காத்மண்டு,

நேபாளத்தின் ஜனாதிபதியாக இருந்து வருபவர் ராம் சந்திர பவுடல் (வயது 78). நெஞ்சு வலியால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் ஒரு வாரத்தில் 2-வது முறையாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதுபற்றி ஜனாதிபதியின் தனி செயலாளர் சிரஞ்சீவி அதிகாரி வெளியிட்ட செய்தியில், திரிபுவன் பல்கலைக்கழக கற்பித்தல் மருத்துவமனையில் நேபாள ஜனாதிபதி சேர்க்கப்பட்டு உள்ளார். டாக்டரின் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு இன்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார். கடந்த 13-ந்தேதி பவுடலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், காத்மண்டு நகரில் உள்ள ஷாகித் கங்காலால் தேசிய இருதய மையத்தில் அவர் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 2-வது முறையாக அவருக்கு இன்று காலை உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், மகாராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள ஷீத்தல் நிவாஸ் என்ற பெயரிடப்பட்ட அவரது அரசு இல்லத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.


Next Story