வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா மந்திரி சபையில் 13 பெண்கள்..!!


வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா மந்திரி சபையில் 13 பெண்கள்..!!
x
தினத்தந்தி 1 Jun 2022 11:08 PM GMT (Updated: 1 Jun 2022 11:08 PM GMT)

வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா மந்திரி சபையில் 13 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்து முடிந்த பொது தேர்தலில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆளும் தாராளவாத கட்சியை வீழ்த்தி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான புதிய மந்திரிசபை நேற்று பதவி ஏற்றது. தலைநகர் கான்பெர்ராவில் உள்ள அரசு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் புதிய மந்திரிகள் 30 பேருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான மந்திரிசபையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 30 பேரை கொண்ட மந்திரி சபையில் 13 பேர் பெண்கள் ஆவர்.

ஆஸ்திரேலியா வரலாற்றில் மந்திரி சபையில் பெண்கள் அதிக அளவில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆட்சியில் 7 பெண்கள் மட்டுமே மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தனர்.

அதேபோல் வரலாற்றில் முதல் முறையாக 2 முஸ்லிம்களும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story