சீன உளவு கப்பலை நிறுத்தியதில் அரசியல் தலையீடு இல்லை - இந்தியாவுக்கான இலங்கை தூதர் விளக்கம்


சீன உளவு கப்பலை நிறுத்தியதில் அரசியல் தலையீடு இல்லை - இந்தியாவுக்கான இலங்கை தூதர் விளக்கம்
x

கோப்புப்படம்

அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பலை நிறுத்தியதில் அரசியல் தலையீடு இல்லை என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த மாதம் 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சீன உளவு கப்பல் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இது இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிண்டா மொரகொடா சீன கப்பலை நிறுத்தியதில் எந்த வித அரசியல் தலையீடும் இல்லை என தெரிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இதுபற்றி அவர் கூறியதாவது:-

முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறிய குழப்பமான நேரத்தில், சீன கப்பலான 'யுவான் வாங் 5' ஐ நிறுத்துவதற்கு அனுமதிக்கும் முடிவு அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்டது. அந்த முடிவில் எந்த அரசியல் தலையீடும் இல்லை.

இதன் மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், இந்தியாவுடன் மிக நெருக்கமான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் எங்களுக்கு ஒரு ஒத்துழைப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும், நாங்கள் அதற்கு பணியாற்றி வருகிறோம் என்று கூறினார்.


Next Story