நிலவு மண்டலத்திற்குள் நுழைந்தது ஆரியன் விண்கலம்: நாசா தகவல்


நிலவு மண்டலத்திற்குள் நுழைந்தது ஆரியன் விண்கலம்:  நாசா தகவல்
x

ஆரியன் விண்கலம் நிலவு மண்டலத்திற்குள் நுழைந்து ஆய்வு பணிகளை தொடரும் என நாசா விண்வெளி அமைப்பு தெரிவித்து உள்ளது.

புளோரிடா,


அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவுக்கு கடந்த 1972-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் பரிசோதனை முயற்சி நிறைவேறவில்லை.

இந்த நிலையில், மீண்டும் நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தில் முனைப்புடன் நாசா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன்படி, வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. எனினும், ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன்படி, விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆர்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும்.

இதன் பயண திட்டம் முதலில், கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் தொடங்க திட்டமிடப்பட்டது. எனினும், எரிபொருள் கசிவு உள்ளிட்ட தொழில் நுட்ப கோளாறால் திட்டம் தள்ளி போனது. தொடர்ந்து, செப்டம்பர் 3-ந்தேதி மீண்டும் எரிபொருள் கசிவால் திட்டம் பாதிக்கப்பட்டது.

அதன்பின்னர், ஐயான் மற்றும் நிகோல் என இரண்டு சூறாவளிகளால் ராக்கெட்டின் பாதுகாப்பிற்காக நிலவு பயண திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

தொடர்ந்து 2 முறை எரிபொருள் கசிவு, 2 முறை சூறாவளி புயலால் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்ட சூழலில், கடந்த 16-ந்தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும், நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பும் நாசாவின் திட்டம் எரிபொருள் கசிவால் 3-வது முறையாக பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 15-ந்தேதி நள்ளிரவில் ராக்கெட்டை செலுத்த தயாரான நிலையில், திடீரென ஹைடிரஜன் வாயு கசிவை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஒருபுறம் கவுன்ட்-டவுன் நடந்தபோதும் மறுபுறம் சிவப்பு குழு எனப்படும் பணி குழுவினர் தொடர்ந்து கசிவை சரி செய்யும் பணியை தொடர்ந்தனர்.

அந்த ராக்கெட்டுக்குள் 37 லட்சம் லிட்டர் அளவுக்கு அதிகம் குளிர்விக்கப்பட்ட ஹைடிரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயு உட்செலுத்தப்பட்டது. இதன்பின் கடந்த 16-ந்தேதி காலை, ராக்கெட் செலுத்தப்படும் நிகழ்வை காண பீச் மற்றும் சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் திரண்டிருந்தனர். எனினும், எரிபொருள் கசிவை சரிசெய்யும் சூழலில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த பணி ஒரு வழியாக நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து, நிலவு ஆய்வு பணிக்கான நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நீண்ட போராட்டத்திற்கு பின்பு அன்று மதியம் 12.17 மணியளவில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதனால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராக்கெட் செலுத்தப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பின்னர், மைய பகுதியில் உள்ள இயந்திரம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது. இதனை அடுத்து, ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த ஆரியன் விண்கலம் நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது.

தொடர்ந்து ராக்கெட் செலுத்தப்பட்டு 5 நாட்கள் நகர்ந்த நிலையில், நாசாவின் ஆரியன் விண்கலம் நிலவு மண்டலத்திற்குள் நுழைந்து உள்ளது. இந்த விண்கலம், நிலவின் மேற்பரப்பில் இருந்து அதிக உயரத்தில், அதேவேளையில், பூமியை சுற்றி வரும் நிலவின் பயண திசைக்கு எதிர் திசையிலும் பயணிக்கும்.

நிலவை சுற்றி ஆரியன் வரும்போது, குறைந்த எரிபொருளை எடுத்து கொண்டு பயணிப்பதுடன், சீரான நிலையிலும் இருக்கும். நிலவை அடைந்தபோது, ஆரியன் 2.4 லட்சம் மைல்களை கடந்திருக்கும்.

ஆரியன் நிலவை 130 கி.மீ. என்ற தொலைவில் இன்று நெருங்கியுள்ளது. விண்கல கட்டுப்பாட்டாளர்கள், சுற்று வட்டபாதையில் செல்லும் ஆரியனின் இயந்திரம் ஒன்றை 2 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் வரை இயக்கியுள்ளனர்.

இதனால், ஆரியன் விண்கலத்தின் வேகம் மணிக்கு கூடுதலாக 933.42 கிலோ மீட்டர் விகிதத்தில் அதிகரிக்க செய்யப்படும். ஆரியன் இந்த நிலையில் 6 முதல் 19 நாட்கள் வரை சுற்றி வந்து தகவல்களை சேகரிக்கும். அதன்பின்பு, விண்கல கட்டுப்பாட்டாளர்கள் ஆரியன் விண்கலத்தின் செயல்பாடு பற்றிய ஆய்வை மேற்கொள்வார்கள்.


Next Story