பாகிஸ்தான்: பணியிடங்களில் 70% பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்; அறிக்கை தகவல்


பாகிஸ்தான்:  பணியிடங்களில் 70% பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்; அறிக்கை தகவல்
x

பாகிஸ்தானில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கும் பெண்களின் எண்ணிக்கை 70 சதவீதம் ஆக உள்ளது.


லாகூர்,



பாகிஸ்தான் நாட்டில் சமீப ஆண்டுகளாக பணியாற்றும் ஒட்டுமொத்த பெண்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. எனினும், அவர்களுக்கு எதிரான மனரீதியாக, உடல்ரீதியாக மற்றும் பாலியல் துன்புறுத்தல் விவகாரங்களும் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2004ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியிடங்களில் 4,734 பெண்கள் பாலியல் வன்முறையை சந்தித்து உள்ளனர் என பெண்களுக்கான உரிமைகளுக்காக பணியாற்றி வரும் ஒயிட் ரிப்பன் பாகிஸ்தான் என்ற அரசு சாரா அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இதுபற்றிய அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு அந்நாட்டில் இருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கும் பெண்களின் எண்ணிக்கை 70 சதவீதம் ஆக உள்ளது. பாதுகாப்பு பற்றாக்குறை மற்றும் முறையற்ற பணிநிலைகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பணியாளராக இருக்கும் எண்ணங்களையே பல பெண்கள் கைவிட்டு விடுகின்றனர்.

தங்களுடைய குடும்பங்களை பாதுகாக்க வேலைக்கு சென்று பொருளீட்ட கூடிய கட்டாயத்தில் உள்ள பெண்கள், வேலையை விட முடியாது என்பதற்காக, இந்த சூழலில்அமைதியாகி விடுகிறார்கள். புகாரும் அளிப்பதில்லை. ஏனெனில் வேலை போய்விடும் என்ற பயம்.

இதுபற்றி பெண் வங்கியாளரான சாரா (வயது 25) என்பவர் கூறும்போது, துன்புறுத்தல்கள் இருக்கின்றன. அவற்றை நாம் புறந்தள்ள முடியாது. ஆனால், நாங்கள் அமைதியாகவே இருக்க வேண்டும். இல்லையென்றால், எங்களை தொடர்ந்து பணியாற்ற எங்களுடைய தந்தைகளும், சகோதரர்களும் அனுமதிக்கமாட்டார்கள். அதனை எங்களால் தாங்கமுடியாது என கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றி, பல்வேறு பெண்களின் அனுபவங்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. அதுபோன்ற பணி சூழலை தவிர்க்க பல பெண்கள், வேலையை விட்டு, விட்டு வேறு வேலைக்கு சென்று விடுகின்றனர்.

சக பணியாளர்களாக ஆண்கள் உள்ள அலுவலகங்கள் மற்றும் ஆண் விகிதம் அதிகம் உள்ள இடங்களில் பணியாற்றும்போது அசவுகரியம் ஏற்படுகிறது என பெண்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் அரசு சமீபத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை சமீபத்தில் இயற்றியது.

இதனால், 2010ம் ஆண்டு சட்டத்தின் பலவீன பிரிவுகள் திருத்தப்பட்டு உள்ளன. அதன்பின்பு, பணியிடங்களில் துன்புறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு (திருத்த மசோதா), 2022 சட்டம் நிறைவேறியது.

சமீபத்தில் இத்தாலிக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் நதீம் ரியாஸ் என்பவர் வர்த்தக அதிகாரி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் நதீமுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை டெய்லி டைம்ஸ் தெரிவித்து உள்ளது கவனிக்கத்தக்கது.

சமீப ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்தபோதிலும், அவர்கள் பணியிட சூழலில் இதுபோன்ற துன்புறுத்தல்களை சந்திக்கும் அவலமும் அதிகரித்து உள்ளது. அவர்களது இக்கட்டான சூழ்நிலைக்கு முடிவே இல்லாத நிலை காணப்படுகிறது. அதனையே பல்வேறு அறிக்கைகளும் சுட்டி காட்டுகின்றன.


Next Story