உக்ரைன் மக்கள் அனைவருக்கும் ரஷிய குடியுரிமை ஆணையில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்

உக்ரைன் மக்கள் அனைவருக்கும் ரஷிய குடியுரிமை ஆணையில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்
x

உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரஷியா கிட்டத்தட்ட 150 நாட்களாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.

கார்கிவ்,

உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரஷியா கிட்டத்தட்ட 150 நாட்களாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.

இந்த சூழலில் உக்ரைனியர்கள் அனைவருக்கும் ரஷிய குடியுரிமை வழங்குவதற்கான விரைவான பாதையை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் ரஷிய அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார்.

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள உக்ரைனியர்கள் எளிதில் ரஷிய குடியுரிமையை பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு ரஷிய அரசு அறிமுகப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய 3 மாதங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் மேற்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களை சேர்ந்த மக்களும் ரஷிய குடியுரிமையை எளிதில் பெறும் வகையில் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில்தான் உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷிய குடியுரிமையை பெறுவதற்கு விரைவு குடியுரிமை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

Next Story