இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி: இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை


இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி: இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை
x

Image Courtacy: PTI

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 இறுதி வேட்பாளரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் பல்வேறு கட்டங்களாக வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் நடந்த 2 சுற்று தேர்தல்களில் 3 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, 5 வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இந்த 2 சுற்று தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்து முன்னிலை வகித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 3-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதிலும் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தாா். மொத்தமுள்ள 358 கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களில் 115 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அவருக்கு அடுத்தப்படியாக வர்த்தக மந்திரியாக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 82 வாக்குகள் கிடைத்தன. வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் டிரஸ்சுக்கு 71 வாக்குகளும், சமூகநலத்துறை முன்னாள் மந்திரி கெமி படேனோச்சுக்கு 58 வாக்குகளும், எம்.பி. டாம் டுகென்தாட்டுக்கு 31 வாக்குகளும் கிடைத்தன. இதில், குறைவான வாக்குகளை பெற்ற டாம் டுகென்தாட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதன் மூலம் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளது.


Next Story