இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி : ரிஷி சுனக் வெற்றி பெறுவது உறுதி?


இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி : ரிஷி சுனக் வெற்றி பெறுவது  உறுதி?
x

இங்கிலாந்து நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்குள் பென்னி மார்டண்ட் 100 எம்.பிக்கள் ஆதரவை பெற முடியாவிட்டால் ரிஷி சுனக் போட்டியின்றி பிரதமர் பதவியை கைப்பற்றி விடுவார்.

லண்டன்,

இங்கிலாந்தின் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில், பெண் பிரதமர் லிஸ் டிரஸ் 20-ந் தேதி பதவி விலகினார். அந்த நாட்டின் வழக்கப்படி, ஆளும் கட்சித்தலைவர்தான் பிரதமர் பதவி வகிக்க முடியும். இதனால் அங்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியைப் பிடித்து, பிரதமர் நாற்காலியை கைப்பற்றப்போவது யார் என்பது பேசுபொருளாகி இருக்கிறது.

357 எம்.பி.க்களை ஆளும்கட்சி பெற்றிருக்கிற நிலையில் 100 எம்.பி.க்கள் ஆதரவைப்பெறுகிறவர்தான் கன்சர்வேடிக் கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும், எனவே 3 பேர் போட்டியிட முடியும் என்ற வாய்ப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட் (வயது 49) போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் குதித்துள்ளார்.

கடந்த முறை லிஸ் டிரசுடன் போட்டி போட்டு கடைசி வாக்கெடுப்பில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனக் (42), கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார்.

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால், ரிஷி சுனக் மற்றும் பென்னி மார்டண்ட் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி ரிஷி சுனக்கிற்கு 142- கன்சர்வேட்டிவ் எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. அதேவேளையில், போட்டியில் நீடிக்க குறைந்தது 100 எம்.பிக்கள் அதரவு தேவை என்ற நிலையில், பென்னி மார்டண்ட்டிற்கு இந்த எண்ணிக்கை கிடைப்பதும் கடினம் என்று தெரிகிறது.

இங்கிலாந்து நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்குள் பென்னி மார்டண்ட் 100 எம்.பிக்கள் ஆதரவை பெற முடியாவிட்டால் ரிஷி சுனக் போட்டியின்றி பிரதமர் பதவியை கைப்பற்றி விடுவார். இன்னும் சில மணி நேரங்களே உள்ளதால் பென்னி மார்டண்ட்டிற்கு ஆதரவு கிடைப்பது கடினம் என்றே சொல்லப்படுகிறது. இதனால், ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் ஆவது ஏறத்தாழ உறுதி என்றே சொல்லப்படுகிறது. ரிஷி சுனக் வெற்றி பெறும் பட்சத்தில் இங்கிலாந்து பிரதமர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். 'இன்போசிஸ்' தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷிதா மூர்த்தியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story