ரஷியாவிலிருந்து வந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திட்டம் இல்லை - உஸ்பெகிஸ்தான் அரசு அறிவிப்பு


ரஷியாவிலிருந்து வந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திட்டம் இல்லை - உஸ்பெகிஸ்தான் அரசு அறிவிப்பு
x

கோப்பு படம்

தினத்தந்தி 30 Sep 2022 5:21 AM GMT (Updated: 30 Sep 2022 5:58 AM GMT)

உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

தாஷ்கண்ட்,

ரஷியாவின் அண்டை நாடான உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷியர்களை நாடு கடத்தும் திட்டம் உஸ்பெகிஸ்தானிடம் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. தாய்நாட்டுக்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் விளாடிமிர் புதினின் அறிவிப்புக்கு எதிராக, ரஷியா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.ரஷியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படும் விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ரஷியாவின் அண்டை நாடுகளான போலாந்து, பின்லாந்து, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளுக்கும் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி ரஷிய நாட்டவர்கள் அதிகமானோர் செல்லத் தொடங்கியுள்ளனர்.

நூறாயிரக்கணக்கான ஆண்கள், சிலர் குடும்பங்களுடன், ரஷியாவை விட்டு வெளியேறினர். முன்னாள் சோவியத் குடியரசு நாடான உஸ்பெகிஸ்தான் உட்பட கஜகஸ்தான் மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளின் அரசாங்கங்கள் ரஷியாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதால், அந்த நாடுகளில் தங்கள் பாதுகாப்பைப் பற்றி ரஷியாவை விட்டு வெளியேறிய பலர் கவலைப்படுகிறார்கள்.

இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற கொள்கைகளில் உஸ்பெகிஸ்தான் உறுதியாக உள்ளது.

உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு எட்டப்பட்ட உஸ்பெகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது. தங்கள் நாட்டின் சட்டத்தை மீறாத வெளிநாட்டு குடிமக்ககளை கட்டாய நாடு கடத்தும் திட்டம் உஸ்பெகிஸ்தானிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் இந்த வாரம் உஸ்பெகிஸ்தான் தலைநகரில் நடனமாடிய ஒரு ரஷிய நடனக் கலைஞரை அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.

ரஷியாவில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ராணுவ அணி திரட்டல் அறிவிப்புக்கு பின் அண்டை நாடான கஜகஸ்தான் நாட்டிற்கு சுமார் 1 லட்சம் ரஷியர்கள் வந்துள்ளனர் என்று கூறியுள்ளது. ஆனால் எத்தனை ரஷியர்கள் தங்கள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்பதை உஸ்பெகிஸ்தான் இதுவரை தெரிவிக்கவில்லை.


Next Story