தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு.. செர்பியாவில் எதிர்க்கட்சியினர் போராட்டம்


தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு.. செர்பியாவில் எதிர்க்கட்சியினர் போராட்டம்
x

செர்பிய தேர்தலில், ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின் செர்பிய முற்போக்கு கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்தது.

பெல்கிரேடு:

செர்பியாவில் கடந்த 17ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதிபர் அலெக்சாண்டர் வுசிக் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. தேர்தல் முறைகேடு தொடர்பாக சர்வதேச பார்வையாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், செர்பியாவில் நடந்த தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. நேற்று நடந்த போராட்டத்தின்போது எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் பெல்கிரேடில் உள்ள அரசாங்க நிர்வாக கட்டிடமான சிட்டி ஹாலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தின் ஜன்னல்களை உடைத்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், பெப்பர் ஸ்பிரே அடித்தும் விரட்டியடித்தனர்.

செர்பிய தேர்தலில், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, ஜனாதிபதி வுசிக்கின் செர்பிய முற்போக்கு கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்தது. செர்பிய முற்போக்கு கட்சி 47 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி (வன்முறைக்கு எதிரான செர்பியா) 23.56 சதவீத வாக்குகளும், செர்பிய சோசலிச கட்சி 6.56 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தன.

ஆனால், நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என எதிர்க்கட்சிகளின் கூட்டணி கூறியுள்ளது. குறிப்பாக பெல்கிரேடில் வசிக்காதவர்கள் வாக்களிப்பதற்காக முறைகேடாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளது.


Next Story