எலான் மஸ்கின் டுவிட்டர் நடவடிக்கையை கண்டிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் - வெளியான அதிருப்தி கடிதம்..!!


எலான் மஸ்கின் டுவிட்டர் நடவடிக்கையை கண்டிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் - வெளியான அதிருப்தி கடிதம்..!!
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 17 Jun 2022 11:29 AM GMT (Updated: 17 Jun 2022 11:35 AM GMT)

மஸ்கின் தீங்கு விளைவிக்கும் டுவிட்டர் நடத்தையை கண்டிப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்முறையாக டுவிட்டர் நிறுவன ஊழியர்களிடம் எலான் மஸ்க் வீடியோ கால் வாயிலாக நேற்று உரையாடினார். அப்போது அவர் பல விஷயங்களை பேசியுள்ளார். குறிப்பாக டுவிட்டர் பயனர்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் தாங்கள் விரும்புவதைச் சொல்ல பயனர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கருத்து சுதந்திரம் பற்றியும் மஸ்க் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இந்த உரையாடலின் போது வேற்று கிரக வாசிகள் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டாக , தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் டுவிட்டர் தொடர்பான நடவடிக்கைகளை கண்டித்து, அந்த நிறுவனத்தின் தலைவர் க்வின் ஷாட்வெல்லுக்கு கடிதத்தை எழுதியுள்ளனர்.

அதாவது மஸ்கின் சமீபத்திய நடத்தை ஆன்லைனில் 2,600 ஸ்பேஸ் எக்ஸ் பணியாளர்களை உள்ளடக்கிய அமைப்பில் உள்ள ஊழியர்களிடையே விவாதத்தைத் தூண்டியது. அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அதனை பிற ஊழியர்கள் நிரப்புவதன் மூலமோ அல்லது கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமோ அவர்கள் கடிதத்தில் கையொப்பமிடுமாறு கேட்கப்படுகிறார்கள்.

அந்த கடிதத்தில் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மஸ்க் அளித்த பதிலைப் பற்றி ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிர்வாகிகள் நிறுவனத்தின் "ஜீரோ டாலரன்ஸ்" கொள்கைகளை தெளிவாக வரையறுக்க வேண்டும்" என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது :

மஸ்க் அவர்களின் தீங்கு விளைவிக்கும் டுவிட்டர் நடத்தையை பகிரங்கமாக கண்டிக்கிறோம் . அவரின் தனிப்பட்ட பிராண்டிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவாகவும் வெளிப்படையாகவும் தங்களை பிரித்துக் கொள்ள வேண்டும்.

பொதுத் வெளியில் மஸ்கின் நடத்தை, குறிப்பாக சமீப வாரங்களில் எங்களுக்கு அடிக்கடி கவனச்சிதறல் மற்றும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அவர் எங்களின் செய்தித் தொடர்பாளராக பார்க்கப்படுகிறார் - அவர் அனுப்பும் ஒவ்வொரு டுவீட்டும் நிறுவனத்தின் உண்மையான பொது அறிக்கையாகும். அவரின் வார்த்தைகள் எங்கள் பணியின் மதிப்புகளை பிரதிபலிக்கவில்லை. உண்மையில் ஸ்பேஸ் எக்ஸ் தற்போதைய அமைப்புகள் மற்றும் கலாச்சாரம் அதன் கூறப்பட்ட மதிப்புகளுக்கு ஏற்ப வாழவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story