எலான் மஸ்க்கை விமர்சித்து அதிருப்தி கடிதம் வெளியிட்ட ஸ்பேஸ்-எக்ஸ் ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்!


எலான் மஸ்க்கை விமர்சித்து அதிருப்தி கடிதம் வெளியிட்ட ஸ்பேஸ்-எக்ஸ் ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்!
x

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டாக , தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் டுவிட்டர் தொடர்பான நடவடிக்கைகளை கண்டித்து கடிதம் எழுதினர்.

வாஷிங்டன்,

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டாக , தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் டுவிட்டர் தொடர்பான நடவடிக்கைகளை கண்டித்து, அந்த நிறுவனத்தின் தலைவர் க்வின் ஷாட்வெல்லுக்கு கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது :

எலான் மஸ்க் அவர்களின் தீங்கு விளைவிக்கும் டுவிட்டர் நடத்தையை பகிரங்கமாக கண்டிக்கிறோம் . அவரின் தனிப்பட்ட பிராண்டிலிருந்து, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் விரைவாகவும் வெளிப்படையாகவும் தங்களை பிரித்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக சமீப வாரங்களில் பொதுவெளியில் அவருடைய நடத்தையால், எங்களுக்கு அடிக்கடி கவனச்சிதறல் மற்றும் சங்கடம் ஏற்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மஸ்க் அளித்த பதிலைப் பற்றி ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மஸ்கின் சமீபத்திய நடத்தை, ஆன்லைனில் 2,600 ஸ்பேஸ் எக்ஸ் பணியாளர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பில் உள்ள ஊழியர்களிடையே விவாதத்தை தூண்டியது. இதனால் அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி, அதனை பிற ஊழியர்கள் நிரப்புவதன் மூலமோ அல்லது கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமோ கடிதத்தில் கையொப்பமிடுமாறு கேட்கப்பட்டார்கள்.

இந்த நிலையில், இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு அனுப்பிய பல ஊழியர்கள் அந்நிறுவனத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதனைகடந்த வியாழக்கிழமையன்று 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.


Next Story