எரிபொருளை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய இலங்கை அரசு அனுமதி


எரிபொருளை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய இலங்கை அரசு அனுமதி
x

கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை, எரிபொருளை கொள்முதல் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

கொழும்பு,

இலங்கை வரலாறு காணாத வகையில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நிய செலவாணி கையிருப்பு தீர்ந்து போனதால், எரிபொருளை கொள்முதல் செய்ய முடியாத நிலைக்கு இலங்கை பொருளாதாரம் சென்றது.

இதனால், அங்கு பெட்ரோல், டீசல் நிலையங்களில் தட்டுப்பாடு நிலவியது. மின்சார நெருக்கடியும் ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இலங்கை மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. மக்களின் ஒட்டு மொத்த கோபமும் ராஜபக்சே குடும்பத்தினர் மீது திரும்பியதால் வேறு வழியின்றி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார். இக்கட்டான சூழலில், நிதித்துறையும் ரணில் விக்ரமசிங்கேவிடமே அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் கடன் சுமையால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் திணறி வருகிறது. இதனால், பெட்ரோல், டீசலுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதால், தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை எரிசக்தி துறை மந்திரி கஞ்சனா விஜேசேகரா வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், " இலங்கையில் உள்ள அனைத்து தனியார் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும், பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் சிலோன் பெட்ரோலிய கழகம் மற்றும் எரிபொருள் நிலையங்களுக்கு சுமை குறையும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story