அனைத்துக்கட்சி கூட்டத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வலியுறுத்த திட்டம் - தமிழ் கட்சிகள் முடிவு


அனைத்துக்கட்சி கூட்டத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வலியுறுத்த திட்டம் - தமிழ் கட்சிகள் முடிவு
x

இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில், தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வலியுறுத்த தமிழ் கட்சிகள் முடிவு செய்து உள்ளன.

அனைத்துக்கட்சி கூட்டம்

இலங்கையில் பன்னெடுங்காலமாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்துள்ளார். அந்த நாடு விடுதலை அடைந்த 75-வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

அதற்கு முன் நாட்டின் தலையாய பிரச்சினையாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டு உள்ளார். இதற்காக அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் ஒன்றுக்கு அவர் அழைப்பு விடுத்து இருக்கிறார்.

தமிழ் கட்சிகள் ஆலோசனை

அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதிக்கு பிறகு இந்த கூட்டம் நடத்தப்படும் என நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அவர் தெரிவித்தார். நாட்டின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பெரும்பான்மை சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுத்துவது முக்கியமானது என அப்போது அவர் கூறினார்.

இலங்கை அதிபரின் இந்த பரிந்துரையை நாட்டின் பிரதான தமிழ் கூட்டணியான, தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்று உள்ளது. அத்துடன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவும் முடிவு செய்து உள்ளது.

இதைத்தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் முன்வைக்க வேண்டிய திட்டங்கள் குறித்து தமிழ் கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளன.

3 அம்ச திட்டம்

அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் வீட்டில் நேற்று முன்தினம் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது அனைத்துக்கட்சி கூட்டத்தில் முன்வைப்பதற்கு 3 அம்ச திட்டம் ஒன்றை தமிழ் கட்சிகள் இறுதி செய்து உள்ளன.

அதன்படி, புதிய அரசியல் சாசனத்தில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை சேர்க்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாகாண தேர்தல்களை நடத்த வேண்டும், தமிழர் நிலங்களை அரசு அபகரிப்பதை நிறுத்த வேண்டும் ஆகிய 3 அம்சங்களை அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இது தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முன்னதாக மீண்டும் சந்தித்து பேசவும் தமிழ் கட்சிகள் முடிவு செய்து உள்ளன.


Next Story