ஆசிய மாநாட்டை நடத்திய கம்போடிய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


ஆசிய மாநாட்டை நடத்திய கம்போடிய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x

அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆசிய மாநாட்டை நடத்திய நிலையில், கம்போடிய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.



நாம்பென்,


இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க கம்போடிய பிரதமர் ஹன் சென் புறப்பட்டு சென்றுள்ளார். அவருக்கு நேற்று மாலை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் வெளிவந்து உள்ளன. அதில், கம்போடிய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சமீபத்தில் கம்போடியாவின் நாம்பென் நகரில் நடந்த ஆசியன் மாநாட்டில், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுடன் 8 தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அவர்கள், கம்போடிய பிரதமர் ஹன் சென்னுடன் முக கவசம் இன்றி ஒன்றாக சந்தித்து கொண்ட சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்த நிலையில், சென்னுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

இதனை தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்ட சென், அன்பிற்குரிய சக நாட்டு தலைவர்களே! இந்தோனேசியாவில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வந்தபோது, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால், எந்த அறிகுறிகளும் எனக்கு இல்லை.

ஒவ்வொரு நாளும் பாலிக்கு வருவதற்கு முன் பரிசோதனை செய்து, அதில் கொரோனா தொற்றில்லை என முடிவுகள் வந்து கொண்டிருந்தன. ஆனால், இந்த தொற்று தற்போது எப்படி ஏற்பட்டது என உறுதியாக எனக்கு தெரியவில்லை.

நேற்று மாலை பரிசோதனை செய்து, அதன் முடிவில் இன்று காலை இந்தோனேசிய அதிகாரிகள் தொற்றை உறுதி செய்துள்ளனர்.

நான் பாலிக்கு காலதாமதமுடன் வந்தது ஒரு வகையில் அதிர்ஷ்டம். அதனால், பிற தலைவர்களுடன் இரவு உணவு சாப்பிட முடியாமல் போய் விட்டது என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து கம்போடிய அரசு குழு சொந்த நாட்டுக்கு இன்று திரும்ப உள்ளனர். இதனால், சீன அதிபர் ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடனான இந்த வார இறுதியில் நடைபெற உள்ள சந்திப்பை சென் தவிர்க்க கூடும்.


Next Story